| ADDED : மே 28, 2024 03:49 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமம், வீரபத்திர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மண்டல தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். நலிந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு, தமிழக அரசு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்க வேண்டும். நாடக தடவாளப் பொருட்களை எடுத்து செல்ல, அரசு பேருந்துகளில் அரை கட்டண சலுகையை நீக்கி, முழுமையாக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வட்டாரத்திற்கு, ஒரு கலைக்கூடம் கட்டிதர வேண்டும்.பேருந்துகளில் சலுகை இருப்பது போல, ரயில் பயண சலுகை அளிக்க வேண்டும். ஓய்வு பெற்ற கலைஞர்களுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கங்காதரன், துலுக்கானம், மணி மற்றும் சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சி புரம் ஆகிய நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.