| ADDED : மே 22, 2024 07:23 AM
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜூ, 65. இவர் திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.நேற்று காலை கோவிந்தராஜூ தனது வயல்வெளிக்கு செல்வதற்காக நந்தியாற்றின் கரையோரம் உள்ள துர்க்கையம்மன் கோவில் பின்புறம் சென்றுள்ளார். அங்கு, மின்கம்பத்தில் இருந்து சென்ற மின் ஒயர், தரையில் இருந்ததை பார்க்காமல் சென்றதால், கோவிந்தராஜூ மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது துாரத்தில், அதே மின் ஒயரில் சிக்கி காட்டுப்பன்றி ஒன்றும் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது. தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கோரமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:மின்வாரிய ஊழியர்கள் கடந்த, 15 நாட்களுக்கு முன், துர்க்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள பழுதடைந்த 10 மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணி செய்தனர். இதில், இரண்டு மின்கம்பங்களில் இருந்து மின்ஒயர் பொருத்தாமல், மின்கம்பத்தில் இருந்து தரையில் ஒயரை தொங்கவிட்டு சென்றனர். மின்ஒயர்கள் சீரமைக்காததால், அவ்வழியாக சென்ற கோவிந்தராஜூ மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார்.மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால், கோவிந்தராஜூ இறந்துள்ளார். மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, திருத்தணி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்ஒயர் பொருத்தப்படாமல் இருந்தது. அந்த மின்ஒயர்களில் மின் சப்ளை 10 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளன. கோவிந்தராஜூ மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்றனர்.