| ADDED : ஏப் 28, 2024 01:45 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், பூமிக்கடியில் புதைவட கேபிள் வழித்தடம் அமைக்க, மின்வாரியம் சார்பில், கடந்த மாதம் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. கனகசுப்பராயன் தெரு சந்திப்பில், பள்ளம் தோண்டியபோது பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து கழிவுநீர் வெளியேறியது.இதனால், கேபிள் பதிக்கும் பணி பாதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. மேலும், சாலையோர பள்ளம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது.எனவே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து, புதைவட கேபிள் வழித்தடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதைவட கேபிள் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய பணம் செலுத்தி முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம்.கேபிள் பதிக்க பள்ளம் தோண்டியபோது கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்தால்தான் அடுத்தகட்ட பணி துவக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''மின்வாரியத்தினர் புதைவட கேபிள் பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டுவதற்கு மட்டுமே பணம் செலுத்தி அனுமதி பெற்றுள்ளனர். கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதை மின்வாரியத்தினர்தான் சீரமைக்க வேண்டும்,'' என்றார்.