உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டுறவு சங்கங்களில் வட்டியில்லா கடன் விவசாயிகளுக்கு ரூ.120 கோடி வழங்க இலக்கு

கூட்டுறவு சங்கங்களில் வட்டியில்லா கடன் விவசாயிகளுக்கு ரூ.120 கோடி வழங்க இலக்கு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 120 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு, கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. ஒரு ஆண்டிற்கு, வட்டியில்லாத கடன் பெற்று விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் பயன் பெறலாம் என, அத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்குகின்றன. இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன் மற்றும் ஆடு, மாடுகள் வைத்திருப்போருக்கு, கால்நடை பராமரிப்பு கடன் என, இரு வித கடன்கள் வழங்கப்படுகின்றன.இதற்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை, இலக்கு நிர்ணயம் செய்து கூட்டுறவு துறை கடன் வழங்குகிறது. அதன்படி, 2023 - -24ம் நிதி ஆண்டில், 11,518 விவசாயிகளுக்கு, 81.06 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, 3,782 பேருக்கு, 14.44 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டு உள்ளது.நடப்பாண்டு 2024- - 25ல், 100 கோடி ரூபாய் பயிர் கடன் மற்றும் 20 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு கடன் என, 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் பெற விரும்பு விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம், விவசாய நிலங்களுக்குரிய சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை வழங்கி பயிர் கடன் பெறலாம் என, கூட்டுறவு துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 120 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு, கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வட்டி இல்லாத கடன் வாங்கி பயன் பெறலாம்.அனைத்து விதமான பயிர்களுக்கு, ஒரு ஆண்டு கால அவகாசத்திற்குள் கட்ட வேண்டும். இதில், கரும்பு மட்டும் 15 மாதங்களில் திரும்ப செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பயன் பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை அந்தந்த கூட்டுறவு வங்கிகளில் கொடுத்து கடன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கடன் விபரம்

பயிர் சாகுபடி ரகங்கள் - ஏக்கருக்கு கடன் தொகை ரூபாயில்நெல் 34,500உளுந்து, துவரை, பச்சை பயிறு 19,850நீர் பாசன, வேர்க்கடலை 30,800மானாவரி, வேர்க்கடலை 19,500கரும்பு ஒரு ஏக்கர் 58,000வாழை 66,000திசு வாழை 93800மிளகாய் 26,500தென்னை 23,500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ