காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவம் நாளையும், தேரோட்டம் வரும் 26ம் தேதியும் நடைபெறுகிறது. இரு நாட்களில் நடைபெறும், உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதில், தேரோட்டம் நடைபெறும் 26ம் தேதி, முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்தைவிட காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.இதனால், காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் மாவட்ட காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் சார்பில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.அதன்படி காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு, புதிய ரயில் நிலையம், பழைய ரயில் நிலையம், ஓரிக்கை மிலிட்டரி ரோடு, கலெக்டர் அலுவலகம் என, ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இதில், திருத்தணி, திருப்பதி, அரக்கோணம், ஓச்சேரி, வாலாஜாபாத், வேலுார், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள், ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் இருந்தும், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை செல்லும் பேருந்துகள், புதிய ரயில் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு செல்லும்.தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் செல்லும் பேருந்துகள் பழைய ரயில் நிலையம் அருகில் இருந்தும், மாகரல், உத்திரமேரூர், மதுராந்தகம் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை மிலிட்டரி ரோடு அருகில் இருந்து புறப்பட்டு செல்லும்.வந்தவாசி, செய்யார், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு செல்லும்.பக்தர்கள் மற்றும் பயணியர் அனைவரும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிக்குமாறு, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நிர்வாகம் மற்றும் காஞ்சிபுரம் மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.