சென்னை : பெருங்களத்துார் - புழல் இடையில் சென்னை பைபாஸ் சாலை, 32 கி.மீ., நீளம் உடையது. சென்னையில் இருந்து திருச்சி, பெங்களூரு, திருப்பதி, கோல்கட்டா செல்லும் நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், இச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில், 60 கி.மீ., இடைவெளியில் சுங்கச்சாவடிகளை அமைக்க வேண்டும் என, விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது. சென்னை பைபாஸ் சாலையில், 12 கி.மீ., இடைவெளியில், வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில், 2010 முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு 75 ரூபாயும், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு 120, பேருந்து, லாரிகளுக்கு 245, கனரக வாகனங்களுக்கு 270 முதல் அதிகபட்சமாக 470 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வானகரத்தில் கார், ஜீப், வேன்களுக்கு 55 ரூபாயும், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு 85, பேருந்து, லாரிகளுக்கு 180, கனரக வாகனங்களுக்கு அதிகபட்சமாக 340 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இந்த சாலை 958 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், 2016ம் ஆண்டு வரை, 187 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வசூலாகியுள்ள சுங்கக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. 'இந்த சாலை அமைத்த நிதியை வசூல் செய்தபிறகு, சுங்கக் கட்டணத்தை 40 சதவீதம் குறைக்க வேண்டும்' என, 2017 ம்ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்த விபரம் மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கையை கணக்கிடும்போது, திட்ட செலவை விட அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், சுங்கக் கட்டணம் குறைக்கப்படாமல், ஆண்டுக்கு 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அடுத்த ஓராண்டிற்கு, இச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கு 105 கோடி ரூபாய்க்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள், மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை, இந்த தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்தி ஓராண்டிற்குள் முழுத்தொகையை ஈடுசெய்ய வேண்டும்.அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த 'ஈகிள் இன்ப்ரா' என்ற நிறுவனத்திற்கு வசூல் பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், உள்ளூர் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அரசியல் பிரமுகரின் பொறுப்பில் கட்டணம் வசூலை ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகளும், இதனை கண்டுகொள்வது இல்லை. இந்நிலையில், 'விதிமீறி இயங்கும் சூரப்பட்டு சுங்கச்சாவடியை மூட வேண்டும்; டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:சென்னை பைபாஸ் சாலையில், விதியை மீறி இந்த சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு முழுமையான சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படவில்லை. சென்னை எல்லைக்குள் உள்ள இந்த சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, சமீபத்தில் சென்னை மேயர் பிரியா, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, இந்த சுங்கச்சாவடி கட்டண வசூல் டெண்டரை ரத்து செய்ய வேண்டும். சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.