| ADDED : ஆக 02, 2024 02:26 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர், பட்டா ஆகிய கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இத்தொழிற்சாலைகளில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பட்டா கிராம சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இரவு, பகலாக தொடர்ந்து இயங்கும் இந்த வாகனங்களால் அச்சாலையில் மண் படிந்து காணப்படுகின்றன. மேலும், லோடு லாரிகள் தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுவதால், லாரிகளில் இருந்து கொட்டும் 'எம் - சாண்ட்,' மணல் உள்ளிட்டவை சாலை ஓரங்களில் தேங்கி அவை மண் புழுதியாக நாள் முழுக்க பறக்கிறது.சாலை ஓரங்களின் இருபுறமும் உள்ள வீடுகளிலும் மண்புழுதி புகுந்து குடியிருப்பினர் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, இச்சாலையில் செல்லும் லோடு வாகனங்களில் தார்ப்பாய் மூடி இயக்கவும், சாலைகளில் மண் புழுதி தேங்காதவாறு பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.