| ADDED : மே 26, 2024 01:10 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார்.இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 21ம் தேதி காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார்.மூன்றாம் நாள் பிரபல உற்சவமான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது.இதில், நான்காம் நாள் உற்சவமான கடந்த 23ம் தேதி காலை சேஷ வாகனமும், மாலை சந்திர பிரபை வாகனமும் நடந்தது.ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை, வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார்.ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள், வேணுகோபாலன் திருக்கோலத்தில், தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு யானை வாகன உற்சவம் நடந்தது.இதில், ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.