மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
04-Nov-2024
வாலாஜாபாத்:தமிழகம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என, மது பிரியர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்க, டாஸ்மாக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.அதன்படி, உற்பத்தி தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள்மீது விற்பனை விலையுடன் கூடிய க்யூ.-ஆர்., குறியீடு ஒட்டப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில், க்யூ.-ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி ரசீது பெறும் வசதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 220 டாஸ்மாக் கடைகளிலும், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், மது பாட்டில்களுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிப்பது குறித்து, நேற்று முன்தினம் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து, ஊத்துக்காடு கடையில், நேற்று முன்தினம் பணியில் இருந்த, இரண்டு மேற்பார்வையாளர்கள், ஆறு விற்பனையாளர்கள் என, எட்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
04-Nov-2024