25 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வாலாஜாபாத்:நாய்க்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளியில் நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் கடந்த 1998- 99 மற்றும் 2000ம் ஆண்டில் பயின்ற 152 மாணவ, மாணவியர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்து நேற்று பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள், தங்களது பழைய நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். மேலும், அப்பள்ளியில் தாங்கள் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள், ஜெயராமன் (வேதியில்) பெருமாள் (கணிதம்), ரமேஷ் (இயற்பியல்), மல்லிகா (வரலாறு), மணிமொழி (ஆங்கிலம்), தனசேகர் (தொழிற்கல்வி), கலைவானி (பொருளியல்), புனிதவதி (ஓவியம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு வரவைக்கப்பட்டு அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளியில் பயின்ற காலத்தில் நடந்த சுவாரசியங்கள் குறித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மாணவர்கள் பேசினர். நிகழ்ச்சியின் நிறைவாக அப்பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும், அப்பள்ளி பழைய மாணவர்கள் சார்பில், பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் வகுப்பறைகள் சீர் செய்தல் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் செலவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்படதக்கது.