உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பஸ்களில் பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாட்டம்: மாணவர்களின் அட்டகாசம்

அரசு பஸ்களில் பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாட்டம்: மாணவர்களின் அட்டகாசம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வழித்தட அரசு பேருந்துகளில் கல்லுாரி மாணவர்கள் பட்டாசு வெடித்து, பிறந்த நாள் கொண்டாடும் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர். விபரீதம் நடக்கும் முன், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் டாக்டர். எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இந்த கல்லுாரிக்கு செல்வோருக்கு வசதியாக உத்திரமேரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாணவர்கள் அரசு பேருந்துகளில் செல்லும் போது, படிக்கட்டுகளிலே தொங்கியபடி பயணிக்கின்றனர். சமீப நாட்களாக மாணவர்கள் சக மாணவர்களின் பிறந்த நாளை, பேருந்துகளில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால், பேருந்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேருந்துகளில் அடிக்கடி பட்டாசு வெடித்து, மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதால், பயணியர் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். பட்டாசு வெடிப்பது குறித்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் கேட்கும்போது, மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. அதேபோல, சாலவாக்கத்தில் இயங்கும் அரசு ஐ.டி.ஐ.,க்கு செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும், அரசு பேருந்திலும் மாணவர்கள் அடிக்கடி பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். எனவே, அரசு பேருந்துகளில் பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தை, காவல் துறையினர் தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் நாராயணன் கூறியதாவது: உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் அரசு பேருந்துகளில், கல்லுாரி மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருப்புலிவனம், சாலவாக்கம், நெல்வாய் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடிக்கும் சம்பவம் அதிகமாக நடக்கிறது. இது குறித்து, காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை