மழைநீர் வரத்து கால்வாயில் அடைப்பு திருப்பருத்திகுன்றம் ஏரி நிரம்புவதில் சிக்கல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியினர் விவசாயம் செய்து வருகின்றனர்.மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், திருப்பருத்திக்குன்றம் ஏரி மற்றும் வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விப்பேடு ஊராட்சியில் உள்ள குண்டுகுளத்தில், இரு ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமான பணி நடந்தபோது, திருப்பருத்திக்குன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டது.இதனால், கடந்த மாதம் ‛பெஞ்சல்' புயலின்போது, விவசாய நிலங்களில் இருந்து வெளியேறிய மழைநீர், திருப்பருத்திக்குன்றம் ஏரிக்கு செல்ல வழி இல்லாததால், குண்டுகுளம் மூவேந்தர் நகரில் தேங்கியுள்ளது. இதனால், திருப்பருத்திக்குன்றம் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது.எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, திருப்பருத்திக்குன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.