மினிபஸ் சேவைக்கு விரிவான திட்டம் வெளியீடு காஞ்சிக்கு நகர பேருந்து சேவை கிடைக்குமா ?
காஞ்சிபுரம்:மினி பஸ் பற்றிய புதிய விரிவான திட்டம் 2024ன் படி, பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு, போதுமான சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்க உள்ளது. மக்களுக்கு பேருந்து சேவையை உறுதி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மினி பஸ் கட்டண திருத்தம், வாகனச் சட்டத்தில், இந்த புதிய விரிவான திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மினி பஸ் கட்டண திருத்தம் இந்தாண்டு மே மாதம் 1 ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வரும் அதே வேளையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், மின் பஸ் சேவையை துவக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.மாநகராட்சியாக மாறிய பின்னரும், காஞ்சிபுரத்தில் சில அடிப்படை வசதிகள், நகர மக்களுக்கு இன்னும் கிடைக்காமலேயே உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக, நகர பேருந்து சேவை இன்னும் துவங்காமல் இருப்பது, நகர்ப்பகுதிவாசிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மின் பஸ்களுக்கான புதிய விரிவான திட்டத்தை அரசு வெளியிட்டுள்ள தற்போது, காஞ்சிபுரம் நகர் முழுதும் மின் பஸ் சேவையை ஏன் துவக்க கூடாது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.நகர பேருந்து சேவை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் இயக்கப்படுகிறது. நகருக்குள்ளேயே இயக்கப்படும் மாநகர பேருந்துகளால், குறைந்த கட்டணத்தில், பயணிகள் செல்ல முடியும். அதுபோன்ற பேருந்து சேவை, காஞ்சிபுரத்தில் துவங்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.காஞ்சிபுரத்தின் அனைத்து பகுதியிலும் இயங்கும் ேஷர் ஆட்டோவில், எந்த பகுதியில் ஏறி இறங்கினாலும், குறந்தபட்சம் 20 ரூபாய் வசூலிக்கின்றனர். சாமானிய மக்களுக்கு இந்த கட்டணம் அதிகம். நகர பேருந்துகளில் மிக குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால், மின் பஸ் சேவையை எதிர்பார்க்கின்றனர். ஓரிக்கையில் இருந்து ஒலிமுகமதுபேட்டைக்கும், செவிலிமேட்டில் இருந்து புதிய ரயில்வே நிலையத்துக்கும், நத்தபேட்டையில் இருந்து பிள்ளையார்பாளையம் பகுதிக்கும் நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என, நகர வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.