| ADDED : பிப் 06, 2024 04:53 AM
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், பல்லவர் காலத்தில் பல வகையான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பழங்காலத்தில் தோன்றிய சிற்பக்கலை, தற்காலத்திலும் சிறந்த கைவினை தொழிலாக விளங்குகிறது.இப்பகுதி சிற்பக்கூடங்களில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிர்மாணிக்கும் கோவில்களுக்கு, கற்சிலைகள் வடிக்கப்படுகின்றன.தெலுங்கானா மாநிலம், நலகொண்டாவில், புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள அபய ஆஞ்சநேயர் கோவிலுக்கு, இங்குள்ள பூஞ்சேரி பகுதி, ஆகமா கட்டட, சிற்பக்கலைக் கூடத்தில், 20 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் கற்சிலை தற்போது வடிக்கப்பட்டுள்ளது.நின்ற திருக்கோல ஆஞ்சநேயர், வலது கையை அபய தோற்றத்தில் வைத்து, இடது கையில் கதையை வைத்துள்ளார். வாலை தலைக்கு மேல் வளையமாக வைத்து, அதில் மணி அணிந்து உள் ளார்.இச்சிலை 1.5 அடி உயர பீடத்தில் நிலைநிறுத்தப்படும். சிற்பக் கூடத்தினர், நேற்று டிரெயிலர் லாரி மூலம், தெலுங்கானாவிற்கு அனுப்பினர்.இதுகுறித்து, சிற்பக் கலைஞர் சடகோபன் கூறியதாவது:ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஊத்துக்குளி பகுதியிலிருந்து 45 டன் தரமான பாறை கல்லை கொண்டு வந்து, சிலை செய்யும் பணி துவக்கப்பட்டது. இப்பணியில், 20 சிற்பிகள் ஈடுபட்டனர். 18 டன் எடையில் சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் கரிகோலத்தை தொடர்ந்து, வரும் 11ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.