| ADDED : நவ 16, 2025 02:13 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொய்கையாழ்வார் குளத்தின் தடுப்பு கம்பி வேலியின் மீது ஏறிச் சென்று, மீன் பிடிக்கும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் கோவில் அருகில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்ட் காஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், குளம் முழுதும் துார்வாரப்பட்டு, கரையை சுற்றிலும் தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில், குளத்தில் மீன்பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் தடுப்பு கம்பி வேலியின் மீது ஏறிச்சென்று குளத்தில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கின்றனர். குளத்தின் தடுப்பு கம்பி வேலியின் மீது ஏறி குதிக்கும்போதோ, குளத்தில் இறங்கும்போதோ சிறுவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, பொய்கையாழ்வார் குளத்திற்குள் சிறுவர்கள் செல்வதற்கு தடை விதித்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.