| ADDED : ஜன 13, 2024 12:42 AM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, நந்தம்பாக்கம் ஊராட்சி, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ், 72; கார்பென்டர். சில நாட்களுக்கு முன், குன்றத்துார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு துரைராஜ் மீது மோதியது. தலையில் படுகாயமடைந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி இறந்தார்.இந்நிலையில், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம், சிறுகளத்துார் ஊராட்சி பகுதியில், அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து, இரவில் படுத்து உறங்குகின்றன.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நெடுஞ்சாலையில் செல்வோரை மாடுகள் முட்டுவதால், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். ஏற்கனவே, மாடு முட்டி முதியவர் இறந்த நிலையில், நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கோ சாலையில் அடைத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.