காஞ்சியில் குற்றச்சம்பவங்கள் குறைவு எஸ்.பி., ஆறுதல் தகவல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2024ல் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் எஸ்.பி.,சண்முகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் வெளியிட்ட செய்திகுறிப்பு :காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள், 147 பேர் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 72 பேர் என, 219 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 337 பேர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஓரு ஆண்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெற்று குற்ற செயலில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். மாவட்டம் முழுதும், 618 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏ பிளஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரும் ஏ பிரிவை சேர்ந்த 7 ரவுடி உள்ளிட்ட 62 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி 2024 முதல் டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில், கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, திருட்டு என, 428 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 298 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 4.02 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதில், 2.84 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இது 70 சதவீதமாகும்.போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, 2024 ல் 100 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 165 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 13.4 லட்ச ரூபாய் மதிப்பிலான, 130.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்றவர்களின் 40 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்ற 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்றதாக, 309 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 39.8 ருபாய் மதிப்புள்ள, 3,984 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து அவர்களின், 145 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 196 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 55.3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, 5,370 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.மாவட்டத்தில் 2024ல் 20 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2023 ல், 34 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. கடந்தாண்டு 14 கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. 35 கொலைமுயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளன.மாவட்டத்தில் 2024 ல் 1,107 வாகன விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 336 பேர் இறந்தனர்; 1,234 பேர் காயமடைந்தனர். விபத்துக்களை ஆய்வு செய்ததில், அதிக சாலை விபத்துக்கள் நடைபெற்ற பகுதிகளாக, 25 இடங்களை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.போக்குவரத்து விதிகளை மீறியதாக 2.62 லட்சம் மோட்டார் வாகன சிறுவழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகையாக 25.76 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பொதுமக்கள் கூடும் இடங்களில், 859 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 1,350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உட்கோட்ட தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 14 தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாவட்ட குற்றவாளிகள் யாரும் இம்மாவட்டத்தில் நுழையாத வகையில் கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.