உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதியதில் உடைந்த கேட் ரயில் போக்குவரத்து பாதிப்பு

வாகனம் மோதியதில் உடைந்த கேட் ரயில் போக்குவரத்து பாதிப்பு

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ---- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த சாலையில் சென்று வருகின்றன.மேலும், சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட பகுதியினர், சிங்கபெருமாள் கோவில் சென்று வர, இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று காலை 8:45க்கு ரயில்வே கேட் மூடும் போது, ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் சென்ற, எய்ச்சர் சரக்கு வாகனம், ரயில்வே கேட்டில் மோதியது. இதில், கேட் உடைந்தது. அதனால், ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இருபுறமும், 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சென்னை கடற்கரை-, செங்கல்பட்டு இடையே சென்ற புறநகர் மின்சார ரயில்கள், சிக்னல் கிடைக்காமல் அங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணியர் அவதியடைந்தனர்.பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து இறங்கிய பயணியர், அருகில் உள்ள ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களை நோக்கி நடந்து சென்றனர்.தகவல் அறிந்து செங்கல்பட்டிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள், இரண்டு மணிநேரம் போராடி ரயில்வே கேட்டை சரிசெய்தனர். அதன்பின், அனைத்து சிக்னல்களும் வேலை செய்யத் துவங்கின. தொடர்ந்து, நண்பகல் 12:00 மணிக்கு ரயில் போக்குவரத்து இயல்புக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ