உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அம்ருத் திட்ட குடிநீர் பணிகளுக்கு கால அவகாசம்...நீட்டிப்பு!:3 மாதத்திற்குள் முடிக்க துறை அதிகாரிகள் திட்டம்

அம்ருத் திட்ட குடிநீர் பணிகளுக்கு கால அவகாசம்...நீட்டிப்பு!:3 மாதத்திற்குள் முடிக்க துறை அதிகாரிகள் திட்டம்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், அம்ருத் திட்டத்தில் குடிநீர் பணிகள் நிறைவு செய்வதற்கு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், குன்றத்துார், மாங்காடு ஆகிய நகராட்சிகளும், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளும் என, நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான, 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 2021 - 22ம் ஆண்டு முதல், 2025 - 26 வரை, குடிநீர் வழங்குதல், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்துதல் மற்றும் நகர்ப்புற இடங்களில், பசுமையான பூங்காக்கள் அமைக்கும் பணிகளை செய்யலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில், 74.82 லட்சம் ரூபாய் செலவில், பூங்காக்கள் கட்டுமான பணிகள், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு பெற்றுள்ளன.வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், அம்ருத் திட்டத்தில் குடிநீர் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் பேரூராட்சியில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, நான்கு தண்ணீர் உறிஞ்சும் கிணறுகள், இரண்டு நீரேற்றும் நிலையங்கள், இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 12 கி.மீ., பிரதான குழாய் இணைப்புகள், 80 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் வினியோக குழாய் இணைப்புகள் அமைக்க திட்டமிட்டு உள்ளனர். இப்பணிகளுக்காக, 20.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு, பாலாற்றில் இருந்து நான்கு உறிஞ்சு கிணறுகள், ஒரு நீரேற்றும் நிலையம், ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2.25 கி.மீ., பிரதான குழாய் இணைப்பு, 47.76 கி.மீ., குடிநீர் வினியோக குழாய் இணைப்பு அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 14.79 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த குடிநீர் பணிகளுக்கு, 2023ல் டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை, 2024, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, கால அவகாசம் அளிக்கப்பட்டது.கால அவகாசம் நிறைவு பெற்றும், குடிநீர் வளர்ச்சி பணிகள் நிறைவு செய்யப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.இதையடுத்து, துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திற்கு பின், 2025, மார்ச் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்த வளர்ச்சி பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால், பேரூராட்சிகளில் தினசரி தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை முடிக்க ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், பருவ மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிக்க இயலவில்லை. தற்போது, பணிகளை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.- நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக அதிகாரி,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ