காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் உட்பட 33 பேர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, போர்க்கொடி துாக்கி, கலெக்டர் கலைச்செல்வியை சந்தித்து, மனு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 51 வார்டுகளில், 33 பேர் தி.மு.க.,வும், எட்டு பேர் அ.தி.மு.க.,வும், எட்டு பேர் சுயேச்சையாகவும், ஒருவர் காங்கிரஸ், ஒருவர் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றனர். நெருக்கடி
மேயராக, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், துணை மேயராக, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.பதவி ஏற்றது முதலே, மேயர் தனி ரூட்டில் பயணிக்கத் துவங்கினார். முக்கிய விவகாரங்களில் துணை மேயரை ஆலோசிப்பதில்லை எனவும், நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் புறக்கணிப்பதாக துணை மேயர் தரப்பில் வருத்தம் இருந்தது. பின்னாளில், மேயர் தரப்பிற்கும், துணை மேயர் குமரகுருநாதன் தரப்புக்கும் இணக்கம் உருவாகி, சுமூகமாக மாநகராட்சி நிர்வாகம் சென்றது.இதற்கிடையே, அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என, ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர்.ஒரு கட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களே, மாநகராட்சி மேயருக்கு எதிராக பிரச்னை செய்யத் துவங்கினர். அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து, தி.மு.க., கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால், தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல், மேயர் மகாலட்சுமி நெருக்கடிக்கு ஆளானார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாமல், ஒவ்வொரு மாதமும் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. கலெக்டரிடம் மனு
இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில், தி.மு.க.,- - அ.தி.மு.க., - சுயேச்சை என, மொத்தமுள்ள, 51 கவுன்சிலர்களில், தி.மு.க., கவுன்சிலர்கள் 17, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7, பா.ம.க., கவுன்சிலர்கள் 2, காங்., துணை மேயர் குமரகுருநாதன், சுயேச்சை 5, பா.ஜ., ஒருவர் என, 33 கவுன்சிலர்கள் இணைந்து, மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வெள்ளிக்கிழமை இரவு, கலெக்டர் கலைச்செல்வியை சந்தித்து, மனு அளித்துள்ளனர்.இந்த விவகாரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, காங்., கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், சுயேச்சை என, 33 கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து போர்க்கொடி துாக்கியுள்ளனர்.இது, மேயர் மகாலட்சுமிக்கும், அவரது கணவர் யுவராஜுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் கலைச்செல்வி எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். பேட்டரி வாகனங்கள்
மேயர் மகாலட்சுமி ஆதரவு கவுன்சிலர்கள் கூறியதாவது:மாநகராட்சியில் செயல்படும் குப்பை ஒப்பந்த பணியில், தி.மு.க., நிர்வாகிகள் பங்குதாரர்களாக உள்ளனர். ஒரு மாதத்திற்கு 1.16 கோடி ரூபாய், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்குகிறது.அந்த நிறுவனம், ஒரு நாளைக்கு 1 லட்சம் கிலோ குப்பை அகற்ற வேண்டும். 1,000 கிலோவிற்கு 4,000 ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் கொடுக்கிறது.ஆனால், குப்பை சரிவர அகற்றுவதில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும், தலா 58 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால், 30 பேர் தான் இருக்கிறார்கள். அதேபோல, பேட்டரி வாகனங்கள் 93 வாகனங்கள் இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் பிரச்னை
ஆனால், 70 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இலகுரக வாகனங்கள், 51 இருக்க வேண்டும், 26 தான் உள்ளது. இதை பிரச்னையை மேயர் தரப்பு கேட்பதாலேயே, மேயர் தரப்புக்கு எதிராக கவுன்சிலர்கள் பிரச்னை செய்கின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் சுந்தரிடம் கேட்டபோது, 'கவுன்சிலர்களை கட்சி மேலிடத்திலிருந்து அழைத்து பேசுவார்கள். நானும் அழைத்து பேசுவேன்' என்றார்.மேயர் மகாலட்சுமியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டதற்கு, 'எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை' என்றார்.
நீதிமன்ற வழக்கு நிலுவை
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்கள் பிரவீன்குமார், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேயர் மகாலட்சுமிக்கு போதிய பெரும்பான்மை இல்லை எனவும், அவரை பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த கால மாநகராட்சி கூட்டங்களில் போதிய கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டி வழக்கில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதில் அளிக்க கமிஷனர், மேயர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.