உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி போராட்டம்: காஞ்சி, திருவள்ளூரில் 1,014 பேர் கைது

சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி போராட்டம்: காஞ்சி, திருவள்ளூரில் 1,014 பேர் கைது

காஞ்சிபுரம்:சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 1,014 பேரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் முன்பு, நேற்று காலை தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் தாலுகா அலுவலகம், ரங்கசாமிகுளம், மூங்கில் மண்டபம், மேற்கு ராஜவீதி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் முன், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று, தி.மு.க.,வினரை கைது செய்தனர். செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், தி.மு.க.,வினருடன் இணைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து, மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரத்தில் மூன்று பெண்கள் உட்பட 156 பேர், ஸ்ரீபெரும்புதூரில் ஐந்து பெண்கள் உட்பட 151 பேர், செங்கல்பட்டில் ஒரு பெண் உட்பட 195 பேர், மதுராந்தகத்தில் இரண்டு பெண்கள் உட்பட86 பேர், மாமல்லபுரத்தில் 80 பேர் என, மொத்தம் 668 பேர் கைது செய்யப்பட்டனர். 10 மணிக்கு மேல், அனைத்து பள்ளிகளிலும், வழக்கம் போல் வகுப்புகள் நடந்தன.திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், மணவாள நகர், திருமழிசை, கே.ஜி.கண்டிகை, திருத்தணி, பெரியகளகாட்டூர், அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு, பொன்னேரி, வேண்பாக்கம், சோழவரம் மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் முன், நேற்று தி.மு.க.,வினர் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமந்தண்டலம் உட்பட பல அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் பணியில் இல்லை. தகவலறிந்து தாமதமாக வந்த போலீசார், மாணவர்களை சமாதானம் செய்து, பள்ளிக்குள் அனுப்பினர். இவ்வாறு, மாவட்டம் முழுவதும் பள்ளிகளின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., ஒன்றிய செயலர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 3 பெண்கள் உட்பட 311 பேரை, மாவட்ட போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும், அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.மாஜி மாணவர் தீக்குளிக்க முயற்சிசெங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், நேற்று காலை தி.மு.க., மாணவர் அணிச் செயலர் செந்தில்குமார் தலைமையில், கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அரசு கலைக்கல்லூரிக்கு சென்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலை 11 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் மாணவர் ஜாகிர் உசேன், திடீரென, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரையும், மறியலில் ஈடுபட்ட, 35 சட்டக்கல்லூரி மாணவர்களையும், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி