உத்திரமேரூர்: பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், நீர்வரத்து கால்வாய் மேடாக இருப்பதால், சாலவாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 300 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி, அப்பகுதியில், 450 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு பினாயூர் பாலாறில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய், 10 ஆண்டிற்கும் மேலாக ஏரி துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், பாலாறு தண்ணீரை சாலவாக்கம் ஏரிக்கு கொண்டு செல்வதில், தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதுகுறித்து, சாலவாக்கம் விவசாயிகள் கூறியதாவது: சாலவாக்கம் ஏரிக்கு, பினாயூர் பாலாறில் இருந்து, குருமஞ்சேரி வழியே வரும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆங்காங்கே சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஆறு ஆண்டிற்கும் மேலாக சாலவாக்கம் ஏரி கால்வாயில், தண்ணீர் வராமல் உள்ளது. மேலும், பினாயூரில், பாலாறில் இருந்து நீர்வரத்து கால்வாய் பிரியும் இடத்தில், பாலாறு தாழ்வாகவும், சாலவாக்கம் ஏரி நீர்வரத்து கால்வாய் மேடாகவும் உள்ளது. இதனால், பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், கால்வாயில் தண்ணீர் வரமுடியாத சூழல் உள்ளது. எனவே, பாலாறின் மட்டத்திற்கு, நீர்வரத்து கால்வாய் மட்டத்தை சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சீரமைத்தால், ஆண்டுதோறும் பருவ மழை நேரங்களில், ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பினாயூர் பாலாறில் இருந்து, சாலவாக்கம் ஏரிக்கு செல்லும், நீர்வரத்து கால்வாய் பிரியும் இடத்தில், கால்வாய் மேடாகவும், பாலாறு தாழ்வாகவும் உள்ளது. இதனால், பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஆற்றின் மட்டத்திற்கு, நீர்வரத்து கால்வாய் மட்டத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.