மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்...அரைகுறை : பல ஆண்டுகளாக நடப்பதாலும் விரக்தி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலை சீரமைப்பு, வணிக வளாகம் அமைத்தல், நவீன தகனமேடை, மருத்துவமனை, உயர்மட்ட பாலம் என, கோடிக்கணக்கான வளர்ச்சி திட்ட பணிகள் அரைகுறையாகவும், இழுபறியாகவும் உள்ளன. திட்ட பணிகள் முடிவுக்கு வராமல் இருப்பதால், நகர மக்கள் நேரடியாக, சரியான காலத்தில் பயன் பெற முடியாமல் விரக்தியில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் 700 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன. மஞ்சள்நீர் கால்வாய் 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகிறது. 10 கோடி ரூபாயில் புதிய மாநகராட்சி கட்டட பணி நடக்கிறது.இதுபோல், பெரிய அளவிலான திட்டங்கள் நகரில் நடந்து வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியான திட்டப்பணிகளில் சுணக்கமும், பல்வேறு பணிகள் அரைகுறையாகவும் முடங்கியுள்ளன.காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய்க்கு மேலாக, பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் இருந்தாலும், வளர்ச்சி பணிகளில் பல இடங்களில் சுணக்கமும், இழுபறியும் நீடிக்கிறது.இதனால் நகரவாசிகள், சரியான நேரத்திற்கு திட்டங்களை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்திக்கின்றனர்.★ நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, காலை, மாலை நேரங்களில், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செவிலிமேடு - மிலிட்டரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, பாக்கியலட்சுமி நகர், மூவேந்தர் நகர், ஜெம் நகர், அருணாசலம் நகர், சலவைத் தொழிலாளர்கள் நகர், விசாலாட்சி நகர் பகுதி வழியாக, பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை இணைக்கும் வகையில், வேகவதி ஆற்றின் குறுக்கே, 5 ருபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இரு ஆண்டுகளாக நடக்கும் இப்பால பணிகள், துாண்கள் அமைக்கப்பட்ட நிலையில் சுணக்கம் அடைந்துள்ளது.★ அதேபோல் 15வது நிதிக்குழு மானிய நிதியில், தலா 25 லட்சம் ரூபாயில், பல்லவன் நகர், விஷ்ணு நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில், நகர்நல வாழ்வு மையங்கள் கட்டி திறக்கப்பட்டன. கடந்தாண்டு, வானவில் நகர், காந்தி நகர், தேரடி தெரு என, மேலும் ஐந்து இடங்களில் நகர்நல வாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், இந்த மையங்களுக்கு தேவையான டாக்டர்கள், ஊழியர்கள் நியமிக்காததால், இதுவரை இக்கட்டடங்கள் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.★ மேயர் மஹாலட்சுமியின் 9வது வார்டில், தொண்டை மண்டல ஆதீன மடம் இயங்கி வருகிறது. மடத்தின் மதில் சுவர் அருகே, 22 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி நிர்வாகம், பொது கழிப்பறை கட்டியது. மடம் அருகே கழிப்பறை கட்டுவதற்கு மடம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம், இந்த கழிப்பறை கட்டடத்தை வணிக வளாகமாக மாற்ற, 7.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை வணிக வளாகமாக மாற்றப்படாமல், கட்டப்பட்ட கழிப்பறை வீணாகி வருகிறது.★ காஞ்சிபுரம் நாகலுத்துமேடு சுடுகாட்டிலும், நவீன முறையிலான தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நமக்கு நாமே திட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. திட்ட மதிப்பீட்டில், மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்கு தொகையாக இருக்கும். அவ்வாறு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு நிதி, காஞ்சிபுரம் நகரின் முக்கியமான வியாபாரிகள் இந்த தகனமேடைக்கு நிதி வழங்கி உதவியுள்ளனர். மீதமுள்ள தொகையை, மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. கடந்த 2022ல், தகன மேடைக்கான பணிகள் துவங்கிய நிலையில், இன்று வரை பணிகள் முழுமையாக முடியாததால், இறந்தோரின் சடலங்களை எரியூட்ட முடியாத நிலை தொடர்கிறது. சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இழுபறியாக உள்ளன.★ காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 வார்டுகள் அடங்கிய நான்கு மண்டலங்களுக்கும், தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சேதமான சாலைகளை சீரமைக்கப்படும் என, மாநகராட்சி கூட்டத்திலேயே பொறியாளர் கணேசன் கவுன்சிலர்களுக்கு பதில் அளித்திருந்தார். ஆனால், இதுவரை சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நகரின் ஏராளமான சாலைகள், மிக மோசமான சாலைகளால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைவது தொடர்கிறது.★ காஞ்சிபுரம் 16வது வார்டில் உள்ள ஒக்கப்பிறந்தான்குளம், நகரின் முக்கிய நீர்நிலையாகும். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 2009ம் ஆண்டில், இக்குளம் சீரமைக்கப்பட்டது. குளம் பராமரிப்பு இல்லாததாலும், சமூக விரோதிகளாலும் நாசம் செய்யப்பட்டது. இக்குளத்தை சீரமைத்து, படகு குழாம் அமைக்க வேண்டும் என்பது நகரவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை. இக்குளம் மிக மோசமான நிலையில் இன்றைக்கும் காணப்படுகிறது.இதுபோல, மாநகாட்சியின் பல்வேறு இடங்களில், அரசு திட்டங்களில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் அரைகுறையாகவும், இழுபறியாகவும் பணிகள் நீடிக்கின்றன.பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த பணிகள், பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதால், அதன்வாயிலாக பயன்பெற வேண்டிய நகரவாசிகளால் இன்று வரை பயன்பெற முடியாத நிலை நீடிக்கிறது.அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், ஆய்வு செய்கின்றனரே தவிர, தீர்வு காணப்படவில்லை என புகார் எழுகிறது.கவுன்சிலர்களும், தங்கள் வார்டில் உள்ள இப்பிரச்னை குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கின்றனர். ஆனாலும், வளர்ச்சி திட்ட பணிகள் முழுமையடையாத நிலையே நீடிக்கிறது.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் கூறியதாவது:வேகவதி ஆற்று உயர்மட்ட பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும். ஒப்பந்ததாரர் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டது. பாலம் வடிவமைப்பில் ஏற்பட்ட குழப்பம் சற்று இருந்தது. அவற்றை சரிசெய்து, பணியை துவக்க சொல்லிவிட்டோம். மூன்று மாதங்களில் இறுதி வடிவம் பெறும்.அதேபோல், நாகலுத்து மேடு தகனமேடை பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அவையும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.நகர் முழுதும் குடிநீர் திட்ட பணிகள் 300 கோடியில் நடக்க உள்ளன. சாலையை உடைத்து குடிநீர் பணி செய்யும்போது, மீண்டும் சாலையை சேதம் செய்ய நேரிடும். அதனால், சீரமைப்பு பணி துவக்க தாமதம் ஏற்படுகிறது.சாலை மீண்டும் உடைத்தால், நிதி இழப்பு ஏற்படும். நிதியை வீணாக்கினால், அரசிடம் நிதி கேட்க முடியாது. அதனால் தான், எந்த சாலையை எப்போது சீரமைக்கலாம் என ஆலோசித்து வருகிறோம். டெண்டர் பணிகள் முடிந்த பின், சீரமைப்பு பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.