உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பயனில்லை... அதிருப்தி!: 4 ஆண்டாக பாலாற்றில் அணை அறிவிப்பு கூட இல்லை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பயனில்லை... அதிருப்தி!: 4 ஆண்டாக பாலாற்றில் அணை அறிவிப்பு கூட இல்லை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய எம்.எல்.ஏ.,க்களாக தி.மு.க.,வைச் சேர்ந்த இருவர் இருந்தும், வெங்குடி, விஷார் ஆகிய இரு இடங்களில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக்கான அறிவிப்புக்கூட வராதது, விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தோறும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக செங்கல்பட்டு வரை பாய்கிறது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏழு இடங்களில் தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒவ்வொரு பருவ மழைக்கும் நுாற்றுக்கணக்கான டி.எம்.சி., தண்ணீர், பாலாற்று வழியாக வீணாக கடலில் கலந்ததே தவிர, ஏரிகளை நிரப்பவோ அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவோ, எந்த தடுப்பணையும் கடந்த காலங்களில் கட்டப்படவில்லை. 2017ல் அறிவிப்பு இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாலாற்றில் ஏழு தடுப்பணை கட்டப்படும் என, 2017ல் அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் ஈசூர் - வல்லிபுரம் இடையே 28 கோடி ரூபாயிலும், வாயலுாரில் 30 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பிலும் நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சி, 2021ல் அமைந்ததும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெங்குடி மற்றும் விஷார் ஆகிய இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய தடுப்பணைகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடுக்கான அரசாணையும் பிறப்பிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பின்போதும், பட்ஜெட் அறிவிப்பின்போதும் விவசாயிகள் எதிர்பார்த்தும், தடுப்பணை சம்பந்தமாக அறிவிப்புகூட வரவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரும், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனும், சட்டசபையிலும், அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், கடந்தாண்டு சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது, தடுப்பணை கட்டக்கோரி கேள்வி எழுப்பியபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'பெரும் நிதியைப் பெற்று 1,000 தடுப்பணைகள் கட்டுவதற்கு வேண்டிய அனுமதியைப் பெற வேண்டும் என முயற்சிக்கிறேன். ஆகவே, அண்ணாதுரை மண்ணாக இருந்தாலும் சரி, தம்பி மண்ணாக இருந்தாலும் சரி. எல்லா மண்ணுக்கும் தடுப்பணை கட்டப்படும்' என, நக்கலாக கூறினார். அதேபோல், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், இந்தாண்டு பட்ஜெட் மீதான விவாதத்தின்மீது, வெங்குடியில் தடுப்பணை கட்டக்கோரி கேட்டபோது, 'வெங்குடியில் தடுப்பணை கட்ட முன்னுரிமை கொடுக்கப்படும்' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். ஆனால், மானிய கோரிக்கை அறிவிப்பின்போது தடுப்பணை பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. புலம்பல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் தரப்பிலும், அமைச்சர் துரைமுருகன், மாவட்ட கலெக்டர், சட்டசபை நிலைக்குழுக்கள் என, பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றில், தடுப்பணை கட்டுவதற்கான அறிகுறியே இல்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: வீணாகும் தண்ணீரை தேக்கினால், பல கிராமங்களில் பயனடையும் என்பதற்காக தான் தடுப்பணை கேட்கிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் மூன்று இடங்களில் அமைத்த தடுப்பணை, சுற்றுப்புறத்தில் 50 கிராம மக்களுக்கு பலன் தந்துள்ளன. 1 டி.எம்.சி., நீர் தேக்கப்படுகிறது. அதேபோல், மற்ற இடங்களிலும் தடுப்பணை அமைத்தால் நன்றாக இருக்கும். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி ஏழு இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்ததாலே, தி.மு.க., நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஓரிடத்தில்கூட தடுப்பணை அமைப்பதாக அறிவிப்புகூட வெளியிடவில்லை. அரசியல் காரணத்திற்காக தி.மு.க., செய்யும் செயலால், விவசாயிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என, 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையை, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே இருக்கும் அரசியல் காரணத்தால் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, தடுப்பணை பற்றி நாங்கள் அரசுக்கு கருத்துரு அனுப்பி விட்டோம். நிதி ஒதுக்கி, தடுப்பணை கட்டுவது அரசின் முடிவு. நிதி ஒதுக்கினால், தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை