துார்வாரிய கழிவு குவியல்களால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருமவழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரி சீரமைக்க, நீர்வள ஆதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி இருந்தார்.அதன்படி, காஞ்சிபுரம் மாநகாட்சிக்கு எல்லையில் உள்ள மஞ்சள்நீர் கால்வாய், மஞ்சள்நீர் கிளை கால்வாய், இரட்டை கால்வாய், தும்பவனம் கால்வாய் உள்ளிட்ட மழைநீர் கால்வாய் துார்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், மஞ்சள்நீர் கிளை கால்வாய் துார்வாரிய கழிவுகள், சின்ன காஞ்சிபுரம் அரசமரம் பின்தெருவில், மழைநீர் கால்வாய் நீர்வழித்தடத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ளது.இதனால், மழை பெய்தால், சேஷாத்ரிபாளையம் தெரு, வேகவதி நதி சாலை, அரசமரம் தெரு மற்றும் பின் தெரு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீர், மஞ்சள்நீர் கிளை கால்வாய் வாயிலாக வெளியேறாமல் சாலையில் தேங்கும் நிலை உள்ளது.எனவே, சின்ன காஞ்சிபுரம் அரசமரம் தெருவில், மழைநீர் கால்வாய் மீது போட்பட்டுள்ள துார்வாரிய கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.