உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள் தீவிரம்

வாலாஜாபாதில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள் தீவிரம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இவர்களின் குடிநீர் தேவைக்காக வாலாஜாபாத் பாலாற்றில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் வாயிலாக உறிஞ்சப்படும் நீரை, வாலாஜாபாத் நகரில் உள்ள 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.எனினும், கோடைக்காலத்தில் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை எனவும், இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில், கூடுதலாக குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பேரூராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அதன்படி, வாலாஜாபாத் பேரூராட்சியில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த 2022- - - 23ம் ஆண்டு, 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 14.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிதியில், வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கூடுதலாக 4 ஆழ்த்துளை கிணறுகள் மற்றும் அப்பகுதியில், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் அறை அமைக்கப்படுகிறது. அதேபோல் 2வது வார்டு மெக்ளின்புரத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதியதாக அமைக்கப்படுகிறது. மேலும், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் பைப்புகளை அகற்றி, புதிய பைப்புகள் பதிக்கும்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு துவங்கி, பருவ மழைக்காலத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணிகள் குறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: வாலாஜாபாத் பேரூராட்சியில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ், பாலாற்றில்புதியதாக 4 குடிநீர் ஆழ்துளை கிணறுகள்அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதேபோன்று, பாலாற்றங்கரையோரம் புதியதாக அமைக்கப்படும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டு தெருக்களிலும், 47 கி.மீ., துாரத்திற்கு புதியதாக குடிநீர் குழாய் பைப்பு புதைத்தல் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதன் வாயிலாக வாலாஜாபாத் பேரூராட்சியில், 3,991 வீடுகளுக்கு நேரடியாக குழாய் இணைப்புகள் பொருத்தப்பட்டு அக்குடும்பங்கள் பயன்பெறக்கூடும். விரைவில் இக்குடிநீர் திட்ட பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை