உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது...சாய கழிவுநீர்:காஞ்சியின் குடிநீர் வளம் பாதிக்கும் அபாயம்

வேகவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது...சாய கழிவுநீர்:காஞ்சியின் குடிநீர் வளம் பாதிக்கும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சாய ஆலைகளில் இருந்தும், குடியிருப்பு கட்டடங்களில் இருந்தும் கழிவுநீர் நேரடியாக வேகவதி ஆற்றில் கலக்கிறது. ஆற்றை பாதுகாக்க வேண்டிய, நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகள் பாய்கின்றன. இதில், தாமல் ஏரியின் கலங்கல் பகுதியில் துவங்கும் வேகவதி ஆறு, முசரவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் நகர், தேனம்பாக்கம், நத்தப்பேட்டை வழியாக வில்லிவலம் பகுதியில் பாலாற்றுடன் கலக்கிறது.ஆற்றின் கரையோரமும், ஆற்றுக்கு உள்ளேயும் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இதுவரை அதிகாரிகள் அகற்றாமல் உள்ளனர். வேகவதி ஆற்றில், வீடுகளின் கழிவுநீர் விடுவதை, மாநகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறையினர் வேடிக்கை பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது மட்டுமே வேகவதி ஆற்றில் தண்ணீர் செல்கிறது. மற்ற நாட்களில், வீட்டு உபயோக கழிவுநீர் அதிகளவில் செல்வதை காண முடிகிறது.இதனால், வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில், சின்ன காஞ்சிபுரம் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க முடியாத சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது.காஞ்சிபுரம் நகரையொட்டி வேகவதி செல்வதால், ஆற்றையொட்டியுள்ள பகுதியில் வசிப்போர் வீட்டு உபயோக கழிவுநீரை வெளியேற்றும் வகையில், புதைவடிகால் வசதி இல்லாத வீடுகளில் இருந்து முறைகேடாக, பெரிய அளவிலான குழாய் பதித்து, ஆற்றில் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இவற்றை தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.தற்போது, சின்ன காஞ்சிபுரம் சேஷாத்ரிபாளையம் தெரு, நாகலுாத்து தெரு, அமுதுபடி பின் தெரு, வெங்கடேஸ்வரா நகர், சி.வி.பூந்தோட்டம் தெரு உள்ளிட்ட உள்ள இடங்களில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் தங்களது கழிவுநீரை ஆற்றில் விடுவது தொடர் கதையாக உள்ளது.சிலர், பாதாள சாக்கடை இணைப்பில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் விடுகின்றன. சிலர் ஆற்றில் திறந்து விடுகின்றனர். சாய ஆலைகள் போல், உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் செல்ல வேண்டும். ஆனால், முறைகேடாக, அவற்றை வேகவதி ஆற்றில் கலப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.குறிப்பாக, சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் வேகவதி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் உடனே தடுத்து நிறுத்தவும், பிற பகுதிகளில் வீடுகளில் இருந்து நேரடியாக வேகவதி ஆற்றில் விடப்படும் கழிவுநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் உள்ள சாய ஆலையில் இருந்து, வேகவதி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் விடப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வுக்குப்பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம் மாநகராட்சி 29வது வார்டில் முறைகேடாக செயல்படும் சாய ஆலை குறித்து, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் குமரன், காஞ்சிபுரம் கலெக்டரிடம் வழங்கியுள்ள புகார் விபரம்சின்ன காஞ்சிபுரம் வார்டு எண் 29ல், ஏழுக்கும் மேற்பட்ட ஜவுளி சாய ஆலைகள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தி வருகிறார்கள். இந்த சாய ஆலைகளில், முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக புதைவடிகால் வழியாக வெளியேற்றுகின்றனர்இதனால், இப்பகுதியில் குடியிருப்போருக்கு தோல் வியாதியும், சுவாச கோளாறு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. மேலும், பாதாள சாக்கடை பைப் லைனில் அரிப்பு ஏற்பட்டு அவ்வப்போது, பைப் லைனில் அடைப்பு ஏற்படுவதால், மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, 29 வது வார்டில் முறைகேடாக செயல்படும் சாய ஆலைகளை நடத்த தடை விதித்தும், பாதாள சாக்கடை இணைப்பை துண்டிக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை