உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறையால் மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறையால் மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், அரும்புலியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், கரும்பு சாகுபடி செய்வதை விவசாயிகள் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதிகளில், சாகுபடி செய்த கரும்புகளை, விவசாயிகள், அறுவடை செய்த பின், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்புகின்றனர்.கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான தொழிலாளர்கள், சென்னையையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் கட்டுமான பணிகளுக்கும் தற்போது சென்று விட்டனர்.இதனால், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், இப்பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில், கடந்த ஆண்டு 900 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில், 630 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.மாற்று பயிரான நெல் போன்ற சாகுபடிகளில், விவசாயிகள் தீவிரம் காட்டுவதால், கரும்பு சாகுபடி நிலப்பரப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.கரும்பு வெட்டுக்கூலி அதிகரிப்பு மற்றும் கட்டுப்படியாகாத கரும்பு விலை போன்றவையே இதற்கு காரணம் என, விவசாயிகள் கூறுகின்றனர்.இந்நிலையில், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை பணிகள் வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.அதற்கு முன்னதாக கரும்பு வெட்டுக் கூலியை அரசு நிர்ணயம் செய்து அரசே ஏற்க வேண்டும் என, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதி கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவரும், சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயியுமான தனபால் கூறியதாவது:கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை மற்றும் வெட்டுக்கூலி அதிகம் போன்றவைகளால் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.அதேபோன்று, கரும்பு அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்துள்ள அதன் உரிமையாளர்கள், கரும்புகளை அறுவடை செய்ய விவசாயிகளிடம் கூடுதலான தொகை வசூல் செய்யும் நிலை உள்ளது.எனவே, கரும்பு வெட்டுக்கான கூலியை அரசு நிர்ணயம் செய்து அச்செலவை அரசே ஏற்க வேண்டும். இதன் வாயிலாக கரும்பு விவசாயத்தில் செலவு குறைவதோடு, கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ