சேதமடைந்த ஏரி கலங்கலை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெருகிறது.தற்போது, ஏரியின் கலங்கல் பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து உள்ளது. பருவ மழை நேரங்களில், ஏரி நிரம்பும்போது கலங்கல் பகுதி உடைந்து, தண்ணீர் வெளியேறி பயிர்கள் சேதமடையும் நிலை உள்ளது.மேலும், கலங்கல் உடைந்தால் ஏரி நீர் முழுதும் வெளியேறி, கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, துறை அதிகாரிகள் சேதம் ஏற்பட்டுள்ள கலங்கல் பகுதியை, நேரில் ஆய்வு செய்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.