உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வன நிலங்களை பிற அரசு துறைகள் கபளீகரம்! எஞ்சியது 7.6 சதவீதம் மட்டுமே

வன நிலங்களை பிற அரசு துறைகள் கபளீகரம்! எஞ்சியது 7.6 சதவீதம் மட்டுமே

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில், காஞ்சியில் 2.1 சதவீதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.5 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது. வளர்ச்சி, போக்குவரத்து வசதியை காரணம் காட்டி, வனத்துக்குள் பல்வேறு சாலைகள் அமைப்பதால், வனப்பகுதி நிலங்களை பிற அரசு துறைகளே கபளீகரம் செய்வதாக வனத்துறையினர் புலம்புகின்றனர்.தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அதிகமுள்ள கோவை, நீலகிரி, தேனி, தென்காசி போன்ற பகுதிகளில், வனப்பகுதி அதிகளவு உள்ளது. ஆனால், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மலை, காடுகள் குறைவு என்பதால், பசுமையும் குறைவாக உள்ளது.சென்னைக்கு மிக அருகில் இரு மாவட்டங்களும் அமைந்திருப்பதாலும், நகரமயமாதல் காரணமாக வனப்பகுதியை அதிகரிக்க முடியாத சூழல், பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.வனப்பகுதிகள் குறைவாக இருப்பதால், பசுமையான இடங்களும் இந்த இரு மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது. இதனால், வெப்ப நிலையும், இரைச்சலும், சுகாதாரமற்ற காற்றையும் அன்றாடம் பெற வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும் என, வனத்துறையினரும் முயற்சிக்கின்றனர். ஆனால், இன்றைய தலைமுறையினரிடையே மரம் வளர்ப்பதில் ஆர்வம் இல்லாத நிலையே உள்ளது.வனத்துறை சட்டப்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், 10 சதவீத நிலங்கள் கூட வனப்பகுதியாக இல்லை என, இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்..காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவாக, 1,704 சதுர கி.மீ., உள்ளது. இதில், 33 சதவீதமாக, 562 சதுர கி.மீ., வனப்பகுதியாக இருக்க வேண்டும்.ஆனால், வெறும் 36.8 சதுர கி.மீ., தான் வனப்பகுதியாக உள்ளது. இது, 2.1 சதவீதம். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த பரப்பளவாக 2,945 சதுர கி.மீ., உள்ளது.இதில், 33 சதவீதமாக 971 சதுர கி.மீ., இருக்க வேண்டும். ஆனால், 162 சதுர கி.மீ., மட்டுமே உள்ளது. ஆனால், 5.5 சதவீதம் மட்டுமே வனப்பகுதியாக உள்ளது.இவ்வாறு, மிக குறைவான பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ள நிலையில், அதில் வாழும் உயிரினங்களும் போதிய வாழ்விடங்கள் இன்றி தவிக்கின்றன. வனப்பகுதி இடையே நெடுஞ்சாலை செல்வதால், சாலையை கடக்கும் மான்கள வாகனங்களில் மோதி உயிரிழக்கின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் பகுதியில் மட்டுமே சில இடங்களில் வனப்பகுதிகள் உள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு, வண்டலுார் ஆகிய பகுதிகளில் ஓரளவு வனப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது.ஏற்கனவே வனப்பகுதி மிக குறைவாக உள்ள நிலையில், வனத்துக்குள் சாலை அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை அனுமதி கேட்பது வனத்துறைக்கு மேலும் சிரமத்தை அளிக்கிறது.இரு மாவட்டங்களிலும், 50க்கும் மேற்பட்ட இடங்களில், வனத்துக்குள் சாலைகள் செல்கின்றன. வனத்துக்குள் சாலை அமைக்க, வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, நெடுஞ்சாலை துறை பல சாலைகள் அமைக்கிறது.குறைவாக உள்ள வனப்பகுதி நிலங்களை, போக்குவரத்து வசதியை காரணம் காட்டி, பிற அரசு துறைகளே பறித்துக் கொள்வது போல உள்ளதாக வனத்துறையினர் புலம்புகின்றனர்.பசுமை பரப்புகளை தோட்டக்கலை துறையுடன் இணைந்து வனத்துறை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து செங்கல்பட்டு வனத்துறை அதிகாரி கூறியதாவது:வனத்துறை சார்பில், அரசு, தனியார் இடங்களிலும், கல்லுாரி வளாகங்களிலும் அதிகளவு மரங்களை நடுகிறோம். ஆண்டுதோறும் மரம் வளர்ப்பது தொடர்பாக அரசு திட்டங்களை பொறுத்து தொடர்ந்து மரம் நட்டு வளர்க்கிறோம்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளர்ச்சி திட்டங்கள் வருகின்றன. இதனால், ஏற்கனவே உள்ள வனப்பரப்பை பாதுகாக்க முயற்சி செய்கிறோம்.ஆனால், வளர்ச்சி பணிகளுக்காக இருக்க கூடிய வனப்பகுதியை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, பல இடங்களில் நெடுஞ்சாலைக்கு வனத்துறை இடத்தை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால், வனப்பகுதிக்கும், விலங்குகளுக்கும் தொல்லை தருவதாக அமைகிறது. ஏற்கனவே உள்ள அரசு இடங்களை வனப்பகுதியாக மாற்ற, காஞ்சி, செங்கல்பட்டில் வாய்ப்பு குறைவு.இதனால், எந்த பகுதியிலும் வாய்ப்பு கிடைத்தாலும் மரம் வளர்க்க ஊக்குவிக்கிறோம். ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க அனைத்து துறை சார்பிலும் முயற்சிகள் எடுக்கின்றனர்.எனவே, இருக்க கூடிய வனப்பகுதியை காத்து, அவற்றில் வேட்டை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.-------------------------------

வனத்துறை சார்பில் அதிகளவு மரங்கள் வளர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிடக்கூடிய மரங்களை காட்டில் வளர்க்க வேண்டும். பறவைகள், பழங்களின் கொட்டைகளை கொண்டு வேகமாக மரங்களை வளர்க்க உதவும். அதிக மரங்களை தொடர்ந்து நட்டால் மட்டுமே வன பரப்பை அதிகமாக்க முடியும். இலுப்பை, ஆலம், அரசம் போன்ற மரங்களை வளர்க்க வேண்டும். வனத்துறை அதிக மரங்களை வளர்க்கிறார்கள். தண்ணீர் வழங்குவதில் கோட்டை விடுகின்றனர். பண்ணை குட்டைகளை ஏற்படுத்த வேண்டும். வனத்துறையினர் கோடை காலங்களில் மரம் நடுவதை தவிர்த்து, தென்மேற்கு பருவமழை காலத்தில் மரம் நட வேண்டும். வடகிழக்கு பருவமழை அந்த மரக்கன்றுகளுக்க கைகொடுக்கும்.

- மாசிலாமணி,தலைவர்,மரம் வளர்ப்போர் சங்கம்.காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி