| ADDED : ஜன 04, 2024 09:23 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, பேரூராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணியிடம், இரு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், குப்பை சேகரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.உதாரணமாக, போஜகார தெரு, செல்ல பெருமாள் கோவில் தெரு, சரவண முதலி தெரு, மஸ்தான் வலிகார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில், குப்பை சேகரிக்கும் பணிகளில், சுணக்கம் ஏற்படுவதாக தெருவாசிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, ஓய்வு பெறும் வயதில், குப்பை அள்ளும் பணியில் முதியவர்களை நியமித்து இருப்பதால், குப்பை சேகரமாவதில் சிக்கல் நீடிப்பதாக புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளரை நியமிக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி துறை முன் வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில், 'காலி பணியிடம் நிரப்ப வேண்டி அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில், துப்புரவு பணி மேற்பார்வையாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.