காற்றாலை உதிரிபாகம் ஏற்றி வந்த லாரியால் ஒரகடத்தில் கடும் நெரிசல்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து ராட்சத காற்றாலை இயந்திரத்தின் உதிரிபாகத்தை ஏற்றிக் கொண்டு, ஒரகடம் வழியாக கனரக லாரி ஒன்று சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்றது.ஒரகடம் மேம்பாலம் அருகே வந்த போது, லாரியில் இருந்த காற்றாலை இயந்திரத்தின் ராட்சத உதிரி பாகம் ஒரு பக்கமாக சாய்ந்தது. இதையடுத்து, லாரியின் ஓட்டுனர் வாகனத்தை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் ஒரகடம் சந்திப்பு அருகே நிறுத்தினார்.அதன்பின், கிரேன் உதவியுடன் மற்றொரு கனரக லாரியில், காற்றாலை உதிரி பாகத்தை மாற்றி அனுப்பினர். இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.இதனால், போக்குவரத்து அதிகமுள்ள ஒரகடம் சந்திப்பில், 1 கி.மீ., துாரத்திற்கு வரிசைக்கட்டி நின்ற வாகனங்களால், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.