உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாநகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்களில் உருவானது... மூன்று அணி!  அ.தி.மு.க., ஆதரவோடு ஜன., 5ல் மாநகராட்சி கூட்டம்

 மாநகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்களில் உருவானது... மூன்று அணி!  அ.தி.மு.க., ஆதரவோடு ஜன., 5ல் மாநகராட்சி கூட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள், ஆதரவு, எதிர்ப்பு என மூன்று பிரிவாக செயல்படுவார்கள் என்பதால், மேயர் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அ.தி.மு.க., கவுன்சிலர்களின் ஆதரவை தந்திரமாக மேயர் தரப்பு பெற்றிருப்பது, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில், அக்., 5ம் தேதிக்கு பின், டிச., 6ல் மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டரங்கில், 'மாநகராட்சி கமிஷனர் தங்களை மதிக்கவில்லை' எனக்கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., மற்றும் சுயேட்., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.இதனால், மேயருடன் சேர்த்து 13 கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டரங்கில் இருந்தனர். இதனால், மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கூட பங்கேற்காததால், கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை.அடுத்த சில நாட்களில் கூட்டம் நடத்தாமல் இருந்ததால், மேயர் மகாலட்சுமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், சுயேட்., பெண் கவுன்சிலர்களும், அ.தி.மு.க., கவுன்சிலர்களும், கடந்த வெள்ளிக்கிழமையன்று, 'டிச., 6ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தின் வருகைப் பதிவேட்டை பார்க்க வேண்டும்' எனக்கூறி, மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனரின் காரின் முன் பெண் கவுன்சிலர்கள் அமர்ந்து நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, வருகைப் பதிவேட்டை, கமிஷனர் செந்தில்முருகன் காண்பித்தார். அதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, 17 பேர், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்தது. மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள், பதிவேட்டில் கையெழுத்திட்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர், தி.மு.க., தரப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஜன., 5ம் தேதி, மீண்டும் மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்தமுறை நிறைவேற்ற முடியாத, 86 தீர்மானங்களுடன் புதிய தீர்மானங்களும் இம்முறை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளனர்.மாநகராட்சி நிர்வாகத்தில், தி.மு.க.,வில், இரண்டு பிரிவுாக செயல்பட்ட கவுன்சிலர்கள், இனி மூன்று பிரிவுகளாக செயல்பட உள்ளனர். அதாவது, தி.மு.க., மேலிடம் அறிவித்த மேயர் மகாலட்சுமியை எதிர்த்து, மேயர் வேட்பாளராக போட்டியிட்ட சூர்யாவுக்கு ஆதரவளித்த சில கவுன்சிலர்கள் மீது மேயர் தரப்பு அதிருப்தியில் உள்ளது. அவர்களும், மேயர் மீது அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், கமிஷன் பிரச்னை காரணமாக, சமீபத்தில் போர்க்கொடி துாக்கிய, 20 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் யுவராஜ் மீது அதிருப்தியில் உள்ளனர்.மேயர் தரப்புக்கு ஆதரவாக, மூத்த கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே இப்போது, ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இதனால், தி.மு.க., வின், 33 கவுன்சிலர்கள் மூன்றாக பிரிந்துள்ளது மேயர் தரப்புக்கு பின்னடைவாக உள்ளது.இருப்பினும், தனக்கான ஆதரவை, அ.தி.மு.க.,வில் இருந்தே பெற்றிருப்பது கவுன்சிலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர், தி.மு.க., மேயருக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.இருப்பினும், அ.தி.மு.க., மேலிட நிர்வாகியின் ஆதரவோடு தான், அந்த இரு கவுன்சிலர்களும் மேயருக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருப்பார்கள் என நாங்கள் நினைக்கிறோம். மேயருக்கு எதிராக போராடி வந்த, ஏழு கவுன்சிலர்களையும் ஏமாற்றிய இரு கவுன்சிலரகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், மாவட்ட செயலர் சோமசுந்தரம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என தோன்றவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து எதிர்ப்பு கவுன்சிலர்கள் கூறியதாவது:மாநகராட்சியின் முழு கட்டுப்பாடும், மாவட்ட செயலர் சுந்தரிடம் உள்ளது. அவரது கண் அசைவில் தான், மாநகராட்சி மேயரும், அவரது கணவரும் இயங்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை, மேயரும், கணவரும் சென்னையில் நேற்று நேரில் சந்தித்தது போல, பேஸ்புக்கில் போட்டோக்கள் போட்டுள்ளனர்.ஆனால், அமைச்சர் நேரு, திருச்சியில் உள்ளார். பழைய போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அமைச்சரின் ஆதரவு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர்.வரும் 5ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், மேயருக்கான ஆதரவு கவுன்சிலர்கள், தி.மு.க.,- - அ.தி.மு.க., என, 20 பேர் வரை உள்ளனர். அதேபோல, கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தாலும், மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கையெழுத்திடுவார்கள் என தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை