காஞ்சிபுரம்,:'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், காஞ்சிபுரத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.இதில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள், வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், மின்வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம் போன்ற துறை சம்பந்தமாக பலரும் மனு அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், அதற்கான உத்தரவுகளை உடனடியாக வழங்கினர் மாங்காடு நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.இதில், வருவாய் துறை, நகராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று தனித்தனி அரங்குகளை அமைத்து மனுக்களை பெற்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 467 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், 25 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.மற்ற மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பரிசீலனையில் உள்ளன.