காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நேரடி பேருந்து சேவை வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சிபுரம் நகரில் இருந்து, மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்சி என, தெற்கு மாவட்டங்கள் பலவற்றுக்கு நேரடி சேவை உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமானோர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு தொழில், சிகிச்சை, சுற்றுலா காரணங்களுக்காக சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வோர், செங்கல்பட்டு, பெருங்களத்துார் போன்ற ஊர்களுக்கு சென்று, கோவை செல்லும் பேருந்துகளை பிடிக்க நேரிடுகிறது. இது பயணியருக்கு வீண் அலைச்சலும், பணம், நேர விரயமும் ஏற்படுகிறது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து நேரடியாக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை துவக்கினால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தே செல்ல முடியும் என, பயணியர் கூறுகின்றனர். எனவே, சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு பேருந்து இயக்க வேண்டும். போக்குவரத்து துறையின், விழுப்புரம் கோட்ட அதிகாரிகள், இந்த கோரிக்கையை ஏற்று, கோவைக்கு பேருந்து சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.