கைத்தறிக்கான கூலி விவகாரத்தில் காஞ்சி நெசவாளர்கள்.. போராட்டம் வங்கியில் வரவு வைக்கும் முடிவை மாற்ற வலியுறுத்தல்
.காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் பருத்தி, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கீழ், நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு, வங்கியில் கூலியை வரவு வைக்கும் நடைமுறையை எதிர்த்து, இரண்டாம் நாளாக போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர். கைத்தறி துறை முடிவை மாற்றவில்லை என்றால், போராட்டம் தீவிரமாகும் என, நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்காஞ்சிபுரம் கைத்தறி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 52 பருத்தி ஆடைகள் நெய்யும் கைத்தறி சங்கங்களும், 22 பட்டு கைத்தறி சங்கங்களும் செயல்படுகின்றன. இதில், 7,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், பட்டு, பருத்தி ஆடைகளை நெய்து, தங்களது கைத்தறி சங்கங்களில் கொடுத்து, அதற்கான கூலியை பெற்று வருகின்றனர்.நெசவுக்கான கூலி, இதுவரை சங்க அலுவலகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தி உள்ளது. ஆட்சேபனை
இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பி உள்ளார். நெசவு கூலியை நெசவாளர்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதால், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகலை, சங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நெசவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பார்த்த நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பல ஆண்டுகளாகவே ரொக்கமாக கூலி பெற்று வந்த நிலையில், வங்கி வாயிலாக கூலியை பெறுவதில் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.காமாட்சியம்மன் கைத்தறி சங்க நெசவாளர்கள் பலரும், தங்களது சங்க கட்டடம் மற்றும் கைத்தறி துறை துணை இயக்குநர் அலுவலகம் முன், கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.காமாட்சியம்மன் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கம் வாசலில் அமர்ந்து நெசவாளர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினர். வங்கி வாயிலாக கூலியை பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், கூலி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.மேலும், கூலியை பெற வங்கி அல்லது ஏ.டி.எம்., மையங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் என, நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அலைச்சல் இன்றி சங்க அலுவலகத்தில் இருந்தே தங்களது கூலியை பெற்றுக்கொள்ள நெசவாளர்கள் விரும்புகின்றனர். எச்சரிக்கை
கடந்த சனிக்கிழமை துவங்கிய போராட்டம், இரண்டாம் நாளாக நேற்றும் நடந்தது. தங்களது கோரிக்கைகளை கைத்தறி துறை பரிசீலனை செய்து உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என, நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து, கைத்தறி துறை அதிகாரி கூறுகையில், 'தமிழகம் முழுதுமேகைத்தறியின் கீழ் பணியாற்றும் நெசவாளர்களுக்கு, வங்கியில் கூலியை வரவு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தான் நாங்கள் செய்கிறோம்.நெசவாளர்களின் போராட்ட விபரத்தை துறை மேலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வங்கியில் கூலி வரவு வைப்பதால், தாமதம் ஏதும் இன்றி நெசவாளர்களுக்கு கிடைக்கும். ரொக்கமாக கூலி வழங்கும் முடிவை அரசு தான் எடுக்க முடியும். காஞ்சிபுரத்திற்கு என தனி உத்தரவு கிடையாது' என்றார்.கைத்தறி துறை ஏற்கனவே கவலைக்கிடமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பல சங்கங்கள் நலிந்து மூடும் நிலையில் உள்ளன. இந்நிலையில், நெசவு கூலியை வங்கியில் வரவு வைத்து, ஏ.டி.எம்., வாயிலாக பெற்றுக்கொள்ள கூறுவது ஏற்க முடியாதது. நேரடியாக சங்கத்தில் கூலி பெறுவதை நெசவாளர்கள் விரும்புகின்றனர். வங்கி வாயிலாக பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கைத்தறி துறையின் முடிவை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.- எஸ்.வி.சங்கர், தலைவர், ஏ.ஐ.டி.யு.சி., கைத்தறி சங்கம், காஞ்சிபுரம்.கைத்தறி துறையில் நெசவாளர்கள் பணி என்பது குடிசை தொழில் போன்றது. இவர்களுக்கான கூலியை வங்கியில் வரவு வைப்பது ஏற்க முடியாதது. சங்கங்களில் சில உரிமைகள் நெசவாளர்களுக்கு உள்ளது. மனைவியின் கணக்கை கணவர் பராமரிக்க முடியும்; தாயின் கணக்கை மகன் பராமரித்துக் கொள்ள முடியும். இவ்வாறான உரிமைகளை பறிப்பது போல் உள்ளது. வங்கி, ஏ.டி.எம்., மையங்களுக்கு கூலி பெற அலைய முடியாது. அதிகாரிகளுக்கு இது புரியவில்லை. வங்கியில் கூலி வழங்கும் நடைமுறையை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.- ஜே.கமலநாதன், தலைவர், கே.எஸ்.பி., கைத்தறி தொழிற்சங்கம், காஞ்சிபுரம்.
உத்தரவு ரத்து!
கடந்த 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், நெசவு கூலியை வங்கி வாயிலாக நெசவாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போதும், நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கைத்தறி துறைக்கு கோரிக்கை மனுக்களை நெசவாளர்கள் அளித்துள்ளனர். நெசவாளர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்த கைத்தறி துறை, நெசவு கூலியை ரொக்கமாகவே கொடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் உள்ளது. மீண்டும் வங்கியில் கூலியை வரவு வைக்க முயற்சிப்பதால், நெசவாளர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.