உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மனு கொடுக்க வரும் மக்கள் அமர அழகிய குடில் அமைப்பு

மனு கொடுக்க வரும் மக்கள் அமர அழகிய குடில் அமைப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுக்க வரும் மக்கள் அமர்வதற்காக, அழகிய குடில் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைதோறும், மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், கலெக்டர் நேரடியாக, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வர். ஒவ்வொரு திங்கட்கிழமையும், 300க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, போன்றவற்றை வழங்கக் கோரி, ஏராளமான மனுக்கள் வருகின்றன. மனு கொடுக்க வருவோர், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில், மனுக்களை கொடுத்ததும், அவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரசீது வழங்கப்படும். ரசீது பெறுவதற்காக, ஏராளமானோர் காத்திருப்பர். இதனால், கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல விரும்புவோர், சிரமப்பட்டனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், வெளிப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாததாலும், மக்கள் அவதிப்பட்டனர். குடிநீர் வசதி செய்து தரும்படி, மனித விழிப்புணர்வு அமைப்பு நிறுவனர் கேசவன், கலெக்டரிடம் மனு கொடுத்தார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கேசவன், தன் சொந்த பணத்தில், திங்கட்கிழமைதோறும் மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். இது குறித்து, 'தினமலர' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மனு கொடுக்க வரும் மக்கள், சிரமப்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு, கலெக்டர் சிவசண்முகராஜா உத்தரவிட்டார். அதன்பேரில், திங்கட்கிழமைதோறும், செவிலிமேடு பேரூராட்சி சார்பில், மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து, மனு வாங்கும் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள, அறிவொளி இயக்க அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் அருகில், மக்கள் அமரவும், மனுக்கள் எழுதவும், அழகிய குடில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசன் கூறும்போது, 'கலெக்டர் உத்தரவின்பேரில், மனு கொடுக்க வரும் மக்கள் வசதிக்காக, 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குடில் மற்றும் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குடிலில் இருக்கை வசதி போன்றவை விரைவில் மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ