காஞ்சிபுரம் : ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணைக் கொலை செய்து, கிணற்றில் வீசிய இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரக்கோணம் தாலுகா பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ்,42. இவர் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில், முருகேசன் என்பவருடைய நிலத்தில், மனைவி லட்சுமி, மகன் மணிகண்டன் ஆகியோருடன் தங்கி, பயிர் செய்து வந்தார். அவ்வப்போது இளநீர் வியாபாரமும் செய்து வந்தார்.கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி தேவராஜ், கீழம்பி கூட்ரோடில் இளநீர் வியாபாரம் செய்ய சென்றார். மணிகண்டன் பள்ளிக்கு சென்றார். மாலை பள்ளி முடிந்து வந்தபோது, தாயைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் பல இடங்களில் தேடியும் லட்சுமி கிடைக்கவில்லை. இது குறித்து தேவராஜ், பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். மறுநாள் லட்சுமி உடலில் காயங்களுடன், வயல்வெளியில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில், கீழம்பி மெயின் ரோடை சேர்ந்த பலராமன் மகன் மதியழகன், 28, ஆரியபெரும்பாக்கத்தை சேர்ந்த கணேசன் மகன் தேவராஜ், 30, ஆகியோõர் தனியே இருந்த லட்சுமியை கற்பழிக்க முயற்சித்துள்ளனர். அவர் கூச்சலிடவே, அவரை கட்டையால் அடித்து கொலை செய்து, உடலை அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. ஜனவரி மாதம் 30ம் தேதி போலீசார், இருவரையும் கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் இரண்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சித்தார்த்தர் விசாரித்தார். விசாரணை முடிவில், மதியழகன், தேவராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டைனயும், தலா 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜரானார்.