காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதூரில், போலீசாரைக் கண்டித்து தீக்குளித்த
வாலிபர், இறந்ததைத் தொடர்ந்து, அவர் மனு மீது, உரிய விசாரணை நடத்தாத,
இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், தற்காலிகப் பணி நீக்கம்
செய்யப்பட்டனர்.சோமங்கலம் அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்
பார்த்தசாரதி, 35. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்
உள்ளனர். கடந்த 9ம் தேதி, வெங்காடு கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், 27,
என்பவர், விமலாவிடம் தகராறு செய்து, அவரது கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
இது குறித்து, பார்த்தசாரதி, கடந்த 11ம் தேதி, சோமங்கலம் போலீசில் புகார்
செய்தார். இந்நிலையில் மதிவாணன் மற்றும் ஊர் பிரமுகர்கள் சமாதானமாக
போகும்படி, பார்த்தசாரதியை வற்புறுத்தியுள்ளனர். அதிருப்தியடைந்த
பார்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூர் மணிக்கூண்டு அருகே, தன் உடலில் பெட்ரோல்
ஊற்றி தீக்குளித்து இறந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து, தகவலறிந்த எஸ்.பி., மனோகரன், புகார் மனுவை முறையாக
விசாரிக்காத, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், திராவிடம் ஆகியோரை தற்காலிகப்
பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.