சித்தாமூர் அருகே, கல் குவாரி நடத்த உரிமம் பெற்றவர்கள், விதிகளுக்குப்
புறம்பாக மலையைக் குடைந்து, இயற்கை வளத்தைச் சூறையாடியது, பொதுமக்களிடம்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சித்தாமூர் அடுத்த விளாங்காடு கிராமத்தில்,
கனிம வளம் மற்றும் மூலிகை வளம் நிறைந்த மலைக்குன்றுகள் அமைந்துள்ளன.
இங்குள்ள மலை உச்சியில், வனதுர்கை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில்
விநாயகர் கோவில் ஆகியவை உள்ளன.இக்கோவில்கள், கிராம மக்களின் வழிபாட்டுத்
தலமாக திகழ்கின்றன. இங்குள்ள மலையில், கல் குவாரி நடத்த, 2006ம் ஆண்டு,
கனிம வளத்துறை முடிவு செய்தது.கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, சென்னையைச்
சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, குவாரி நடத்த உரிமம் வழங்கப்பட்டது.
உரிமம் பெற்ற நிறுவனம், அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டு,
விதிகளுக்கு புறம்பாக கனிம வளத்தைச் சுரண்டினர். குறிப்பிட்ட இடத்துடன்,
அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்த கனிமங்களைச் சுரண்டினர். பல்லாயிரம்
டன் செம்மண் தோண்டி எடுக்கப்பட்டது. கனிமங்கள் கொள்ளை போவது குறித்து,
அப்பகுதி இளைஞர்கள், அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.கனிம வளத்தைத் திருடியவர்கள், மலை அடிவாரத்திலிருந்த
விநாயகர் கோவிலை சேதப்படுத்தி விட்டனர். லாரிகள் செல்வதற்கு வசதியாக, நீர்
வரத்துக் கால்வாயை தூர்த்து, பாதை அமைத்துள்ளனர். சட்டசபை தேர்தலுக்குப்
பின் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வப்போது சிலர்,
லாரிகளில் மண் மற்றும் கற்களை திருடிச் செல்கின்றனர். இவற்றை தடுத்து
நிறுத்தவும், விதிகளுக்குப் புறம்பாக அரசு நிலங்களில் செம்மண் எடுத்தவர்கள்
மீதும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ஆலின் சுனேஜா
கூறும்போது, 'அரசு புறம்போக்கு நிலங்களை சர்வே செய்து மீட்க நடவடிக்கை
எடுக்கப்படும். கல் குவாரி விதிமீறல் குறித்து, கனிமவளத் துறை நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என்றார். -க.வீரராகவன்-