வாகனங்களில் பேட்டரி திருடியவர் கைது
ஸ்ரீபெரும்புதுார் : மாம்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் கன்டெய்னர் லாரிகள், மாம்பாக்கம் சிப்காட் சாலைகளில் நிறுத்துகின்றனர்.இந்த நிலையில், இரவு நேரங்களில் கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்களில் இருந்து தொடர்ந்து மர்ம நபர்கள் 'பேட்டரி' திருடி செல்வதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு புகார் வந்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே கிளாய் பகுதியைச் சேர்ந்த அபினாஷ், 20, என்பதும், அவர் சாலையோரம் நிற்கும் கன்டெய்னர் வாகனங்களில் இருந்து தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.