| ADDED : பிப் 15, 2024 09:56 PM
மேல்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேட்டுக்குப்பம் - பெரும்பாக்கம் சாலை 8 கி.மீ., நீளமும், 3.75 மீட்டர் அகலமும் கொண்டது. அகலம் குறைவான இச்சாலையில், எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால், இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் 3.75 மீட்டர் அகலம் கொண்ட சாலை, தற்போது 5.50 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இச்சாலையோரம் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில், முதற்கட்டமாக மேல்கதிர்பூர் சாலையோரம், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைகழக என்.எஸ்.எஸ்., மாணவர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து, 5 அடி உயரம் கொண்ட வேம்பு, பூவரசு, இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்.ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் செடிகளை மேயாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றிலும் பாதுகாப்பாக துணி வலை அமைத்தனர்.