சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:பனப்பாக்கம் செல்லும் சாலையோரம் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதால், தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே, பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் வட்டம்பாக்கம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த சாலை வழியாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், பனப்பாக்கம் ஏரியையொட்டி 100 மீட்டர் துாரத்திற்கு சாலையோரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத் தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பனப்பாக்கம் சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.