சென்னை:மொபைல் போனில், சிறார் ஆபாச வீடியோவை அனுப்பி 1,000 ரூபாய் வாங்கிய வழக்கில், வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தார்.வடமாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் 'ஆன்லைன்' வாயிலாக, புகார் ஒன்றை அளித்தார்.அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தன் 'வாட்ஸாப்' எண்ணிற்கு, சிறார் ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி, அதற்காக 1,000 ரூபாய் பெற்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்.புகார், சென்னை, அண்ணா நகர் துணை கமிஷனரின், சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. பணம் பெற்ற எண்ணை வைத்து விசாரித்ததில், மாதவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன், 35, என்பது தெரிந்தது.இவர், சிறார் ஆபாச வீடியோ பகிர்ந்து, பணம் பெற்றது உறுதியானது. மகேந்திரன் மீது, அண்ணா நகர் மகளிர்போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
முன்விரோதமா?
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஆபாச படங்கள் மற்றவருக்கு பகிர்ந்தால் மட்டுமே குற்றம் என, நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், புகாரை விசாரித்து வழக்கு பதிந்தோம். ஆபாச 'வாட்ஸாப் குழு வாயிலாக, வடமாநில வாலிபரை தேர்வு செய்து, பணத்தை பெற்றதாக தெரிகிறது. இதேபோல், யார் யாருக்கு வீடியோ அனுப்பி பணம் பெற்றார்; வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கிறோம்.மகேந்திரன் மொபைல் போனில் அனைத்து விபரங்களுக்கு 'டெலிட்' ஆகி இருந்ததால், போனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். வடமாநில வாலிபர் 'ஏன் இவரிடம் பேச்சு கொடுத்து, பணத்திற்காக வீடியோ வாங்கி, இவர் மீதே புகார் அளித்திருப்பது சந்தேகமாக உள்ளது. இவர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா என' விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.