கிராம சபையில் நிறைவேற்றிய 823 பணிகளில்... ஒன்றுகூட முடியலை!:அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் சுணக்கம்
காஞ்சிபுரம்: கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 823 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 'நம்ம ஊரு, நம்ம அரசு கிராம சபை' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட இப்பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டும், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் கிராமங்கள்தோறும், கிராம சபை கூட்டம் நடத்தப்படும். கிராமங்களுக்கு வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள் பேசி விவாதிப்பர். கிராம சபைகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், போதுமான வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ.7.38 கோடி நிதி
மாவட்டம் முழுதும் 823 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதுகுறித்து விவாதித்த பின், 7.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள, ஒன்றிய நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பணிகளை, ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இரு மாதங்களாகியும், தேர்வு செய்த பணிகளில் ஒன்றுகூட முடிக்கவில்லை என்பது, அதிருப்தியை கிளப்பியுள்ளது. இதுகுறித்து, கம்மவார்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது: காந்தி ஜெயந்தி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திய அக்., 11ம் தேதி, காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே விரிவுபடுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை ஓரம் எரியாத மின் விளக்குகள் சீரமைக்க வேண்டும். பிரதான சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். பள்ளி அருகே வேகத்தடைகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, கிராம சபையில் தெரிவித்தோம். இதுபோல், 'நம்ம ஊரு, நம்ம அரசு கிராம சபை' செயலியில் பதிவேற்றம் செய்து, துவங்கவுள்ள பணிகள், நடந்துவரும் பணிகள், நிறைவடைந்த பணிகள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளும் பணி விபரம் குறித்து, குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை புகைப்படத்துடன், அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குளறுபடி
அந்த வகையில் பணிகள் துவங்கியுள்ளதாகவும், நடந்து வருவதாகவும் மட்டும், அந்த செயலியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பணி துவங்கி இரு மாதங்களாகியும் இன்னும் முடியாததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 823 கோரிக்கை மனுக்களும் நிலுவையிலே உள்ளன. அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. சாதாரணமாக பொருத்த வேண்டிய மின் விளக்குகள் பணியைகூட கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், இந்த செயலியில் போலியாக தகவல் பதிவிட்டு குளறுபடியும் நடக்கிறது. அதாவது, மின் விளக்கு பிரச்னை என்று ஒரு இடத்தை குறிப்பிட்டால், அதற்கு பதில் நல்ல நிலையில் உள்ள மின் விளக்கை புகைப்படம் எடுத்து, பழுதை சரிசெய்து விட்டதாக குறிப்பிட்டும், மோசடி நடக்கிறது. உயர் அதிகாரிகள், இப்பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் என்பதால், பணிகள் மெதுவாக நடக்கின்றன. சில பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்திருக்கும். விரைவில், அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.