கோவில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம்
காஞ்சிபுரம்:மஹாளய அமாவாசையான நேற்று, கோவில் குளக்கரைகளில், ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினம், முன்னோரை ஆராதிப்பதற்காக, தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. அதன்படி, மஹாளய அமாவாசையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயார் குளம் உள்ளிட்ட கோவில் குளங்களில், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, காலை 6:00 மணியில் இருந்தே குவிந்தனர். இதனால், கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து, புரோஹிதர் மந்திரம் ஓத, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாக வழங்கினர். திருப்புட்குழி: திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பறவைகளின் அரசனாக விளங்கும் ஜடாயுவிற்கு, ராமர் ஈமக்கிரியை செய்ததால், ஜடாயு தீர்த்த குளம் என, அழைக்கப்படுகிறது. இங்கு, நேற்று, மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து, ஜடாயு தீர்த்த குளத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர்.