செடிகள் சூழ்ந்த நடைபாதை விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஒட்டியுள்ள சென்னை - பெங்களூரூ நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையோரம், ‛கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, கால்வாய் தளத்தின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோனேரிகுப்பம் ஊராட்சி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியிருப்பு பணியாளர் குடியிருப்பில் வசிப்போர், பொன்னேரிக்கரை நான்குமுனை சந்திப்பில், போலீஸ் பூத் அமைந்துள்ள பகுதி வரை நடந்து செல்வர். அங்கிருந்து ஷேர் ஆட்டோ, பேருந்து வாயிலாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், நடைபாதையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகள் நடைபாதையில் வளர்ந்துள்ளதால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, பொன்னேரிக்கரை நான்குமுனை சந்திப்பில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குடியிருப்பு வரை, நடைபாதையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.