மேலும் செய்திகள்
ஊராட்சிகளுக்கு வழங்க 5,000 மரக்கன்று தயார்
02-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையுடன், வனத்துறை இணைந்து, 49,200 மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் வாயிலாக தரமான மரக்கன்றுகளை ஊராட்சிகளில் நட்டு பராமரிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த ஊராட்சிகளில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் நபர்கள் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் நபர்களுக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 நபர்களுக்கு, தினசரி வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சி என, ஐந்து வட்டாரங்களில், ஐந்து ஊராட்சிகளில் நாற்றாங்கல் பண்ணை அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வந்தனர். இந்த மரக்கன்றுகளை கிராம ஊராட்சிகள் சாலை ஓரம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் நட்டு வந்தனர்.இதுதவிர, அண்ணாமறுலர்ச்சி திட்டத்தில், ஊராட்சிகள்தோறும் நாற்றாங்கல் பண்ணை அமைத்து, 100 நாள் பணியாளர்கள் மூலமாக மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வந்தனர். இந்த மரக்கன்றுகளுக்கு, முறையான உர நிர்வாகம் மற்றும் நீர் நிர்வாக பாரிமரிப்பு இல்லாததால், பல்வேறு பகுதிகளில், நட்ட மரகன்றுகள் இறந்துள்ளன.இதை தவிர்க்கும் விதமாக, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறையினருடன் இணைந்து, ஒருங்கிணைந்த பசுமை தமிழ்நாடு இயக்கம் என்கிற பெயரில், நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்கு, உத்திரமேரூர் ஒன்றியத்தில், பெருங்கோழி ஊராட்சி; வாலாஜாபாத் ஒன்றியத்தில், நத்தாநல்லுார் ஊராட்சி; காஞ்சிபுரம் ஒன்றியத்தில், கம்மராஜபுரம் ஊராட்சி; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், எச்சூர் ஊராட்சி; குன்றத்துார் ஒன்றியத்தில், கரசங்கால் ஆகிய ஊராட்சிகளில் நர்சரி பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதில், 49,000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்யப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். இங்கு, உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் உயரமாகவும், ஊட்டத்துடன் இருக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வனத்துறையினருடன், எங்கள் துறையும் இணைந்து, ஒருங்கிணைந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தில், 49 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த நாற்றங்கால் பண்ணைக்கு 100 நாள் பணியாளர்களை வனத்துறையினர் பயன்படுத்திக்கொள்வார்கள். மேலும், தரமான மரக்கன்றுகளை வனத்துறையினர் உற்பத்தி செய்து, ஊராட்சிகளுக்கு கொடுப்பார்கள். இந்த திட்டத்தின் மூலமாக, பசுமை பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றியம்/ மரக்கன்றுகளின் எண்ணிக்கைகாஞ்சிபுரம்/ 5,000ஸ்ரீபெரும்புதுார்/ 16,000குன்றத்துார்/ 8,200உத்திரமேரூர்/ 15,000வாலாஜாபாத்/ 5,000மொத்தம்/ 49,200
02-Feb-2025