ரூ.6 கோடியில் சுகாதார நிலையங்களுக்கு கட்டடங்கள் சட்டசபை தேர்தலுக்கு முன் பணியை முடித்து திறக்க திட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6 கோடி ரூபாய் செலவில், சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஐந்து நகர் நல மையங்கள்; 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 168 துணை சுகாதார நிலையங்கள் என, 206 சுகாதார நிலையங்கள் உள்ளன.பல்வேறு வசதிகள்
இந்த சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, தடுப்பூசி, பொது மருத்துவ சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகிறது. இதுதவிர, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை அறை, பிரசவித்த தாய்மார்களுக்கு படுக்கையுடன் கூடிய அறைகள், உறவினர் தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கட்டாயம் சுகாதார துறையினருக்கு உள்ளது. https://x.com/dinamalarweb/status/1947113767898374159காரணம், 50 ஆண்டு களுக்கு மேலாக கட்டடங்களை, சுகாதாரத் துறையினர் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கட்டடங்களில் வசதிகளை மேம்படுத்த முடியாத சூழல்கள் உருவாகி வருகிறது.துறை சார்ந்த பொறியாளர்களின் பரிந்துரையில், பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும் என, துறை சார்ந்த நிதி மற்றும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம், கம்மராஜபுரம், நத்தப்பேட்டை ஆகிய இடங்களில், 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர, களியாம்பூண்டி, பரந்துார் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் தாமல், ஏனாத்துார், காட்டுப்பாக்கம், இளநகர், அகரம் துாளி உள்ளிட்ட துணை சுகாதார நிலையங்கள் என, 6.05 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இனி, சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு ஏற்ப வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.கூடுதல் கட்டடங்கள்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகை தரும் கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் கட்டடங்கள் தேவை உள்ளன.நடப்பு ஆண்டு நிதிக் குழு மானியத்தில், 6 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.