பட்டா விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து முற்றுகை போராட்டம்
காஞ்சிபுரம்: பட்டா விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து, 50க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்குளம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், 2000ம் ஆண்டில், 73 பேருக்கு அரசு சார்பில், வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டா விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததால், வீடு கட்ட முடியாமலும், அரசின் திட்டங்களில் சலுகை பெற முடியாமலும், அடமானம் வைக்க முடியாமலும் என பல வகையில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுகா அலுவலக அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி, வெள்ளைக்குளம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், தாலுகா அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். தகவலறிந்த போலீசார், தாலுகா அலுவலகம் சென்று சமாதானம் செய்தனர். வருவாய் துறை ஊழியர்களும், வெள்ளைக்குளம் பகுதி மக்களை சமாதானம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.